ஆக்கம்: அபிராமி விமலாதித்தன்
மிகுந்த அடக்குமுறைகளையும் தடைகளையும் தாண்டி, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு சாதனை புரிந்த இலங்கையின் பெண்கள் வரிசையில், ஜுவைரியா மொஹிதீன் முன்நிற்கின்றார். உள்நாட்டு இடப்பெயர்வின் அவலத்தைத் தாண்டி வெகுதூரம் வந்த அவருடைய பயணம் அடுத்த தலைமுறைப் பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக உள்ளது. ஜுவைரியா மொஹிதீனுடைய மனித உரிமைச் செயற்பாடுகளுக்காக 2020 ஆம் ஆண்டுக்கான Front Line Defenders விருது வழங்கப்பட்டமை சுட்டிக்காட்டப்படவேண்டிய ஒன்றாகும்.
வெளியுலகை தைரியமாக எதிர்கொள்வதற்கு சிறுவயதிலிருந்தே தாம் பழகிக்கொண்டதாக ஜுவைரியா குறிப்பிடுகின்றார். பிள்ளைப் பருவத்திலேயே தமது தந்தை மூலம் தொழில் வாழ்வுக்கு பழக்கப்படுத்தப்பட்டதாக கூறும் அவருக்கு, இளம் வயதிலேயே புத்தளத்தில் இருந்து கண்டிக்கு தனியாகச் சென்று திரும்பிய பேருந்துப் பயணம் தமக்கு அளப்பரிய மன உறுதியை அளித்தாக தெரிவித்தார். அந்த பயணம் குறித்து தமது அப்பாவின் எண்ணப்போக்கு எவ்வாறு இருக்கும் என ஆரம்பத்தில் ஜுவைரியா அஞ்சினார். எனினும் அப்பா அது குறித்து பாராட்டையே வெளிப்படுத்திய போது ஜுவைரியா பெற்ற மகிழ்ச்சி அவரது பிற்கால வாழ்வுக்கு அடித்தளமாகியது. தனது அப்பாவைப் பற்றி அவர் சொல்லும்போது "எங்களை அப்பா ரொம்பவும் கௌரவமாக, கண்ணியமாக வளர்த்தார். நிபந்தனைகள், கண்டிப்புகள் இருந்த போதும் சுதந்திரமும் எங்களுக்கு இருந்தது. இங்கிலிஷ் படிங்க என்று வலியுறுத்தினார். எந்த நிலை வந்த போதும் எங்களை படிக்க வேண்டாம் என்று அவர் சொல்லவில்லை.” என்கிறார். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவே தனது பலம் என்கிறார் ஜுவைரியா.
போர்க்காலச் சூழலில் இடம்பெயர்ந்து வாழ்ந்த முகாம் வாழ்க்கையிலும், கிராம அபிவிருத்தி நிறுவனம் ஊடாக ஆரம்பித்த தனது சமூகப்பணிசார் வாழ்விழும் கடுமையான உழைப்பை அர்ப்பணிப்போடு வெளிப்படுத்திய அவர், அந்த வேலையை ஆற்றுவதற்காக தினமும் நான்கு கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் நடந்தே பயணித்திருந்ததை நினைவு கூறுகின்றார். அந்த நிறுவனத்தில் குறிப்பிட்டளவு காலம் மிக மதிப்பு வாய்ந்த சேவையை ஆற்றிய ஜுவைரியாவுடைய சொந்த வாழ்வில் திருமணம் சற்று தாமதமாக நிகழ்ந்த போதும், அவரது மனதுக்கு உகந்த வாழ்க்கை துணை அமைந்தமை மிக முக்கியமானது.
திருமணத்துக்குப் பின்னர் குழந்தை பெற்று தாயாகிவிடாத நிலை ஆரம்பத்தில் காணப்பட்டதன் காரணமாக ஒரு பெண் என்ற வகையில் ஜுவைரியா சில விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. சமூக சேவையை முன்னிட்டு குழந்தைப்பேற்றை அவர் மறுதலிப்பதாக அந்த விமர்சனங்கள் அமைந்திருந்தன. இவற்றினால் அவர் சிறிது தாக்கமுற்ற போதும், மனம் தளராமல் சமூக சேவைகளைத் தொடர்ந்தார்.
எச்சந்தர்ப்பங்களிலும் தனது வேலைகளின் பாதகமான சந்தர்ப்பங்களை தாம் தோல்வியாகப் பார்த்ததே இல்லை என்கிறார் ஜுவைரியா. ஆரம்பநிலைகளில் பாதகமானவை போன்று தோற்றமளித்த பல அனுபவங்கள் உண்மையில் சாதகமானவையே என தாம் பின்னாளில் உணர்ந்ததாக அவர் குறிப்பிடுகின்றார். “இயலாது, முடியாது” போன்ற வார்த்தைகளுக்கு தங்கள் அணியின் செயற்பாடுகளில் இடமே இருந்ததில்லை என்று கூறும் அவருடைய புன்சிரிப்பில் தைரியம் வெளிப்படுகிறது.
பாதிக்கப்பட்டு துயர்நிலையில் தம்மிடம் வரும் பெண்களின் பிரச்சினைகளுக்கு துணை நிற்பதற்கு ஜுவைரியா என்றுமே மறுத்ததில்லை. பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருதல் தொடர்பில், தம் மீதும் தமது சமூக நிறுவனத்தின் மீதும் மக்கள் வைத்துள்ள அளப்பரிய நம்பிக்கை குறித்துப் பேசும்போது அவர் நெகிழ்ந்து போகின்றார். ஓர் உறுதிமிக்க பெண்ணாக இந்த உலகில் கால் ஊன்றி நிற்பதற்கு இவை போன்ற பல காரணிகள் உள்ளதாக அவர் சொல்கின்றார்.
குறித்த ஒரு பிரச்சினைக்காக ஊடகத்தில் வெளிப்படையாகத் தோன்றி பேசிய ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டுச் சொல்லும் ஜுவைரியா, தனது வாழ்வின் சவால் மிக்க காலங்களில் ஒன்றை அந்த ஊடக அனுபவம் ஏற்படுத்தியதாகக் கூறுகின்றார். தனது கருத்து வெளிப்பாடானது தனது மதத்திற்கு எதிரான உரையாக சித்திரிக்கப்பட்டுப் பார்க்கப்பட்டது எனவும் அதன் காரணமாக தனது சமூகத்தினரின் வித்தியாசமான உடையாடல்களுக்கு தாம் இரையானது குறித்தும் அவருக்கு சிறிது வருத்தம் உண்டு. எனினும், ஊடகமூடாக தாம் வெளிப்படுத்திய அந்தக் கருத்தாடலானது, தொடர்ந்தும் பேசுபொருளானமை அவருக்கு நல்ல திருப்தியையே அளித்தது. எனினும், இச்சம்பவத்தின் பின்னர் ஊடகங்களில் கருத்துரைக்கும் போது, வார்த்தைகளில் சற்று அதிக கவனத்தைச் செலுத்துதலைப் பின்பற்றி வருவதாகவும் ஜுவைரியா சொல்கின்றார்.
பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றவர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் பல ஆண்டுகால அனுபவத்திலிருந்து, அனைவருக்கும் சட்டஅறிவு தெளிவூட்டப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் எடுத்துரைக்கின்றார். இதன் மூலம் பல பிரச்சினைகள் ஆரம்பமட்டத்திலேயே தீர்ந்துவிடக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாக அவர் கருதுகின்றார். சட்டவாக்கச் செயற்பாட்டின் இயங்குதளமான நாடாளுமன்றத்தில் பெண்களின் கணிசமான பிரதிநிதித்துவத்தையும் அவர் வலியுறுத்துகின்றார்.
ஆணாதிக்க சிந்தனை கொண்ட சமூக உறுப்பினர்களால் தாம் எதிர்கொண்ட தடைகள் பல என்று சுட்டிக்காட்டும் ஜுவைரியா, இடம்பெயர்வின் அவலச்சூழலிலிருந்தான தனது முன்னேற்றமும், தன்னால் வழங்கப்படும் பெண் தலைமைத்துவமும் பல மரபார்ந்த சிந்தனைப் போக்குடைய ஆண்களின் கண்களை உறுத்தியிருக்கின்றது எனவும் அதன் விளைவுகளே தனக்கு தடைக்கற்களாக மாறின எனவும் குறிப்பிடுகின்றார். தமது சமூக நிறுவனமானது தாம் சார்ந்த சொந்த மதத்திற்கே எதிரானது எனவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டதையும் தமது நிறுவன ஊழியர்கள் மீதும் இவ்வாறான பிரசார மூளைச்சலவை முயற்சிகள் இடம் பெற்றதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தமது ஆளுமைப் பிம்பம் மீது சேறுபூசும் நடவடிக்கைகள் இன்று வரை தொடர்வதாகச் சொல்லும் ஜுவைரியா, எனினும் தாம் அது குறித்து அலட்டிக் கொள்ளாமல் தமது சமூக சேவையின் இலக்குகள் மீதே குறியாக இருப்பதாகக் கூறுகின்றார்.
இதற்கு மேலதிகமாக, அரசுசார் விசாரணை அமைப்புகளின் தொந்தரவுகளும் தன்னை சில வேளைகளில் மனம் தளரச் செய்ததாகவும், தாம் அவ் விசாரணைகளுக்கு உளரீதியாக தம்மை தயார்ப்படுத்திக் கொண்டிருந்த போதும், தெய்வாதீனமாக அச்சிக்கல்கள் ஓரளவிற்குப் பின்னர் அகன்றமையையும் அவர் குறிப்பிடுகின்றார். அரச விசாரணை அமைப்புகளின் கண்காணிப்பு வளையத்திற்குள் தாம் இன்றும் இருப்பதாகவும் எனினும் தாம் நேர்மையாக சமூகத்திற்கு தொடர்ந்தும் உழைத்து வருவதாகவும் ஜுவைரியா கூறுகின்றார்.
தமது தீவிர சமூக சேவையானது, தமது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களையும் குடும்ப வாழ்வையும் கடுமையாகப் பாதித்துள்ளமையை அவர் ஒப்புக் கொள்கின்றார். உறவினர்கள் மரணப்படுக்கையில் இருக்கும் போது கூட, அவர்களை தாம் சந்திக்க முடியாமல் போனதையிட்டு அவர் வருந்துகின்றார். தனது சவால்கள் மிகுந்த நாட்களில் சொந்த வாழ்கையின் அழகான பகுதிகள் பலவற்றை இழந்துள்ளதாகச் சொல்லும் ஜுவைரியா இவ்வாறு கூறுகின்றார்: “எங்கட குடும்பத்தாக்கள் சொல்லுவாங்க. இந்த வேலைய விட்டு நில்லு. பயமாக்கிடக்கு. அக்கா தங்கச்சிகளிட பிள்ளைகளைக் கூட இந்த வேலைக்கு விடுறதுக்கு பயம். நான் எங்கயும் போனாலும் வந்தாலும் அவங்களுக்கு சரியான பயம். என்ன பிரச்சினை எண்டாலும் நீ எங்க நிக்கிறாய் எண்டு தான் கேப்பாங்க. எண்ட பேர்சனல் லைஃப்ல நிறைய பாதிப்பு ஏற்பட்டிச்சு. பிள்ளைகளுக்கு அன்பு, அரவணைப்பு, கல்வி, கணவருக்கு கொடுக்க வேண்டிய சந்தோசங்கள், அன்பு, அரவணைப்பு, நாங்கள் குடும்பமா வெளிய போன நாட்கள் எண்டது சரியான குறைவு”. மேலும் பொருளாதார வலிமையை தமது குடும்பத்திற்கு அளித்திருக்கக் கூடிய சந்தர்ப்பங்களை எல்லாம் தியாகம் செய்துள்ளமையையும் ஜுவைரியா நினைவு கூர்கின்றார். இழப்புகள் இல்லாமல் சாதனைகள் இல்லை என்கின்ற பொதுவிதியை இது நினைவுபடுத்துகின்றது.
எதிர்காலத்தில் தாம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த கனவையும் ஜுவைரியா பகிர்கின்றார். "என்னுடைய மரணத்துக்கிடைல முஸ்லிம் விவாக விவாகரத்து சட்டத்தை பாராளுமன்றத்தினால் திருத்ததிற்கு உட்பட்டு சட்டமாக்கப்படுவதற்கு என்னை அர்ப்பணிக்க வேண்டும் என்பதே எனது கனவு. முஸ்லிம் விவாகரத்து தொடர்பான சட்டத்தில் பெண்ணுடைய வயசு சொல்லுப்படேல்ல. அப்ப அந்த பெண்ணுடைய வயசு பதினெட்டு ஆக இருக்கோணும் எண்டதை நாங்க உறுதிப்படுத்தோணும். அது கட்டாயமாக்கப்படோணும் எண்டது இருக்கு. ஒரு ஆண் வந்து விவாகரத்து அப்ளை பண்ணினா அவங்க காரணம் சொல்லத் தேவை இல்லை. காரணம் எதுவும் இல்லாம விவாகரத்து பண்ணலாம். அந்த நிலையில பெண்கள் எந்தவித குற்றம் செய்யாத நிலையிலும் கூட ஆண்கள் விவாகரத்து எடுத்திட்டு போற வாய்ப்பு இருக்கு. அதனால பாதிக்கப்படுற பெண்களை பாதுக்காத்திடோணும் எண்ட நிலமைய உருவாக்கோணும் எண்டது எண்ட கனவா இருக்கு. அதே நேரத்தில பெண்கல்வியும் பெண்களுக்கு உரிய வியாபாரம் - இந்த ரெண்டிலயுமே வந்து கட்டாயமா இந்த கிராம மட்ட சமூகத்தில மாற்றத்தை ஏற்படுத்துறதுக்காக வேண்டி தொடர்ந்து போராடோணும் எண்டத்தையும் நான் யோசிச்சிருக்கிறன்.”
சமூகத்தில் தாம் ஏற்படுத்திய மாற்றங்களே தமக்கு தொடர்ச்சியான மனத் திருப்தியை அளிப்பதாக கூறுகின்ற ஜுவைரியாவுக்கு, பாதிப்புற்ற பெண்களின் கண்ணீரைத் துடைத்தமையும் நொறுங்கிய இதயங்களை மீளக்கட்டமைத்தமையுமே மகிழ்வு அளிக்கின்றது. தன்னைச் சுற்றியுள்ள எவருமே எதிர்மறைக் கருத்துகளை எச்சந்தர்ப்பத்திலும் பேசுவது இல்லை என்பதை அவர் குறிப்பிட்டுச் சொல்கின்றார். இன்னும் தாம் எதை செய்ய வேண்டும் எனத் தீர்மானித்திருப்பதை ஜுவைரியா பகிர்ந்து கொண்டார்: “எதிலயாவது சிக்குப்பட்டு மாட்டுப்பட்டு இருக்கிற ஆக்களை அதில இருந்து மீட்கோணும். அதத்தான் விடுதலை எண்டு நான் சொல்லுறன். மாற்றத்துக்கான போராட்டக்குழு ஒன்றை புத்தளம் மாவட்டத்திலும் இலங்கை முழுவது எப்பிடியாவது ஏற்படுத்தோணும். அதை வலுவூட்டோணும். ஏற்கனவே இதுகள் இருந்து இருந்து இல்லாம போனாலும், ஏன் இல்லாம போச்சு எண்டதுக்கு நிறைய கதைகள் இருக்கு. அப்ப அதை எப்பிடி வலுவூட்டலாம்? புத்தளம் மாவட்டத்தில அது நிலைச்சு நிக்குறதுக்கு என்ன செய்யலாம்? பெண்களுக்கு என்னென்ன வகையான பயிற்சிகளைக் குடுத்து மாற்றத்துக்கு பாடுபடக்கூடியவர்களாக மாற்றலாம் என்டுதான் நான் யோசிக்கிறன்.”
சமூகசேவைத்துறையில் தாம் பெற்ற அனுபவம் எதிர்கால சவால்களை புன்சிரிப்புடன் எதிர்கொள்வதற்கும் மூலோபாய ரீதியில் கையாள்வதற்கும் உதவும் என அவர் உறுதியாக நம்புகின்றார். அடுத்த தலைமுறை சமூக மாற்றத்துக்காக உழைக்கத் தயாராக வேண்டுமென்று விரும்புகின்ற ஜுவைரியா, அது நடைபெறும் என்பது குறித்து உறுதியுடன் இருக்கின்றார்.
(அபிராமி விமலாதித்தன் ஒரு சமூகவியல் ஆய்வாளர். அவர் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள மக்களுடன் பல்வேறுபட்ட சமூக பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்)
(அபிலேஷா சேகர் இலங்கைப் பெண்களின் கதைகள் திட்டத்தின் செயற்றிட்ட முகாமையாளர் ஆவார்)
மேலதிக வாசிப்பிற்கு மற்றும் குறிப்புகளிற்கு
FRONT LINE DEFENDERS ASIA-PACIFIC REGIONAL AWARD, 2020
https://www.frontlinedefenders.org/en/profile/juwairiya-mohideen
Juwairiya Mohideen: A Portrait in Courage
https://groundviews.org/2020/10/15/juwairiya-mohideen-a-portrait-in-courage/
“I was shunned and called a traitor” - Juwairiya Mohideen https://www.dailymirror.lk/opinion/I-was-shunned-and-called-a-traitor-Juwairiya-Mohideen/231-198496