ஜென்சிலா: சமூக மாற்றத்தை தன்னிலிருந்து ஆரம்பித்த செயற்பாட்டாளர் நேர்காணல்: அபிராமி விமலாதித்தன் ஆக்கம்: அபிராமி விமலாதித்தன்

ஜென்சிலா: சமூக மாற்றத்தை தன்னிலிருந்து ஆரம்பித்த செயற்பாட்டாளர் நேர்காணல்: அபிராமி விமலாதித்தன் ஆக்கம்: அபிராமி விமலாதித்தன்

நாம் எல்லோருமே மாற்றத்தை விரும்புகிறோம். சிலருக்கு மட்டும் சமூகத்தின் ஒழுங்குவிதிகள் கண்ணுக்கு முன்னால் வளைந்து கொடுக்கும் போதும் எளிதாக நடைபெறவேண்டிய காரியங்கள் அரச இயந்திரத்தின் மெத்தனத்தால் அதீதமான தாமதம் ஆக்கப்படும் போதும் நமது குழந்தைகளுக்கான எதிர்காலம் கேள்விக்குறி ஆக்கப்படும் போதும் நமக்கு கோபம் வருகின்றது. மாற்றத்தை நாம் கோருகின்றோம். ஆனால் எத்தனைபேர் அந்த மாற்றத்தை நமக்குள் இருந்து உருவாக்க விரும்புகின்றோம்?

 “எந்த விஷயத்தில் நாங்கள் பயணிக்க விரும்புறோமோ அது குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும்”  என்கிறார் ஜென்சிலா. 

விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட ஒரு தந்தைக்கு மூத்த மகளாக 1970-ஆம் ஆண்டு முல்லைத்தீவில் பிறந்தார் ஜென்சிலா. 7 பெண்களும் 3 ஆண் சகோதரர்களுமாக 12 பேர் கொண்ட அவரது குடும்பம் உள்நாட்டு யுத்த காரணங்களால் முல்லைத்தீவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கும், யாழ்ப்பாணத்திலிருந்து 1990-ஆம் ஆண்டு புத்தளத்துக்கும் வெளியேற்றப்பட்டது.

முல்லைத்தீவைச் சேர்ந்த ஜென்சிலா ஒரு சமூகச் செயற்பாட்டாளர். மனித உரிமைகளுக்கான போராளி. சக மானுடர் துயரப்படுகையில் காணச் சகியாதவர். சமூகத்துக்காக குரல் கொடுப்பவர். பிரச்சினைகளுக்கான மூலத்தை நோக்கி சமூகப் பார்வையைத் திருப்புவதற்காக தொடர்ந்தும் பாடுபடுபவர். தனது பாடசாலைக்காலம் முடிந்த கையோடு சமூகப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக களம் இறங்கிய அவருடைய வாழ்க்கையிலிருந்து அடுத்த தலைமுறையினர் கற்க வேண்டிய பாடங்கள் பல உள்ளன.

சமூகப்பொறுப்பு மிக்க  தனது வளர்ச்சியில்  துணைநின்ற தன் தந்தையை  ஜென்சிலா எப்போதும் நினைவு கூர்கின்றார். ஒரு முஸ்லிம் பெண்ணாக சமூகம் தன் மீது செலுத்திய அடக்குமுறைகளை எதிர்த்து நிற்பதற்கு தமது தந்தையே தமக்கு உறுதுணையாக இருந்ததாக அவர் கூறுகின்றார். பெண்களுக்கு கட்டுப்பாடு அதிகமாயிருக்கும் ஒரு சமுதாயப் பின்னணியில் வளர்ந்த தம்மை, அக்கட்டுப்பாட்டு வேலிகளின் முட்கள் குத்திவிடாதவாறு காப்பாற்றிய தந்தை மீது நன்றி நிரம்பிய அன்பு கொண்டிருக்கும் நிலையில், அவருடைய இறுதிக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வழிபாட்டு மணி மாலை ஒன்றை ஜென்சிலா தம்முடனேயே வைத்திருக்கின்றார். அவரது தந்தை இறுதி நேரத்தில் கையில் வைத்திருந்த அந்த மாலையை நினைவுப் பொருளாக இன்றுவரை வைத்துள்ளார் ஜென்சிலா. அவருக்கு கஷ்டமான நேரங்களில் அவரது தந்தை தன்னுடனேயே இருப்பதைப்போன்று, அந்த மாலை உள்ளதாக அவர் உணர்கின்றார்.

முல்லைத்தீவில் தண்ணீரூற்று  எனும் ஓர் அழகிய கிராமத்தில் பிறந்த ஜென்சிலா தமிழ்-முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு வாழ்ந்திருந்த காலத்தின் இனிமையை அடிக்கடி எண்ணிக்கொள்கின்றார். ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக வாழ்கின்ற வாழ்க்கையில் எளிமையான அந்த கிராம மக்களின் அன்பில் ஜென்சிலாவின் இளமைக்காலம் கழிந்தது.  எனினும் அவரது 20 வயதிலேயே அந்தக் காலம் மாறியது. இனிமையாகப் பழகிய மனங்களின் உறவுநிலைகள் நொறுங்குவதை அவர் தன் கண்முன்னாலேயே கண்டார். இந்தப் பின்னணியில் அவரது பாடசாலைக் கல்வியின் இறுதிப்பகுதியும் மிகுந்த சிக்கல் வாய்ந்ததாகவே அமைந்தது.

முரண்பாடுகள் சூழ்ந்த போர்நிலமாகிவிட்ட தனது நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்ட நிலையில், அவர் தன் க.பொ.த. உயர் தரப் பரீட்சையை 1991-ல் புத்தளம் மாவட்டத்தில் இருந்தே எதிர்கொண்டார். அந்த பரீட்சையை எதிர்கொள்வதற்கு தனக்கு வலுவளித்த நண்பிகளை ஜென்சிலா இன்றும் மறக்கவில்லை. உயர்தரப் பரீட்சையின் பின்னர்  சமூகசேவை நிறுவனம் ஒன்றில் பணியில் இணைந்த அவர், அந்த வேலையில் சேர்ந்தமை தொடர்பில் தான் எதிர்கொண்ட வெளிமுகமான சமூக அழுத்தங்களையும் குறிப்பிட்டார்.

முதலாவதாக, ஜென்சிலா தம்மை இணைத்துக் கொண்ட ஆர்.டி.எஃப். என்ற நிறுவனத்தில்   நிவாரணப் பணிகள்தான் மேற்கொள்ளப்பட்டன. முக்கியமாக, அது முல்லைத்தீவிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கான நிறுவனம், நிறைய ஆண்கள் வேலை செய்யும் இடம். அங்கு பால்நிலை உத்தியோகத்தர் என்ற வேலை ஜென்சிலாவுக்கு கிடைத்தது. அந்த வேலை சமூகப் பார்வையில் சவாலானதாக அமைந்தது. ஏனென்றால், நிறைய ஆண்கள் மத்தியில் ஒரு தனிப் பெண்ணாக அவர் பயணிக்க வேண்டியிருந்தது. சமூகக் கட்டமைப்பில் உள்ள "பெண்கள் இந்த இந்த வேலைகளைத்தான் செய்யலாம். இப்படி இப்படித்தான் இருக்க வேண்டும்" என்ற நிலைமையை ஜென்சிலா உடைத்துச் சென்று வந்தது ஒரு பெரிய போராட்டமாக இருந்தது. அப்படி இருக்கும்போது, நிறைய உறவுகளில் இருந்து எதிர்ப்பு நிலைகள் வந்த வேளைகளில், ஜென்சிலாவின் அப்பாதான் நிதானப்படுத்தி, அந்த வேலையைத் தொடர்வதற்கு ஜென்சிலாவுக்கு வழிகாட்டினார்.

தனது முதலாவது சமூகசேவை வேலையில் ஈடுபடுகையில் ஜென்சிலா வெளியுலகம் குறித்து நிறையவே அறிந்து கொண்டார். தாம் இவ்வளவு காலமும் அறிந்திராத புதிய விடயங்கள் அங்கு அறிமுகமாவதை அவர் கண்டார். பெண்கள் குறித்து அவருக்குள் திணிக்கப்பட்டிருந்த சமூக அழுத்தங்களை பகுத்தாராயக்கூடிய புதிய அறிவுத்தெளிவு அங்கு அவருக்கு கிடைக்க ஆரம்பித்தது. அங்கு மெல்ல மெல்ல பயிற்சிகளில் ஈடுபட்டு படிக்கும் போதுதான் அவருக்கு  கேள்விகள் எழும்பும் நிலைகள் ஏற்பட்டன. அவர் ஒரு முஸ்லிம் பெண். ”பெண்கள் இப்பிடித்தான் இருக்க வேண்டும், இப்பிடித்தான் வாழ வேண்டும்” என்னும் நிலைமைகளில் ஏன் மாற்றங்களைக் கொண்டுவர முடியாது என்பதான யோசனைகள் அவருக்கு வர ஆரம்பித்தன. அவருடைய சொந்த வார்த்தைகளில் அது இப்படி வெளிப்படுகின்றது. “அங்க நான் வேலை செய்யும் நேரத்தில எங்களுக்கு பிரச்சினை, பொருளாதார நிலைப்பாடு, பசி ஆகியவை தான் தெரியும். உரிமை எண்டதை சிந்திக்கவே ஏலாத நிலையில தான் நான் அந்த வேலையில போய் சேர்கின்றேன்." எனும் அவர், அங்கு இருக்கும் போது தான் ஈடுபட்ட பயிற்சிகளின் போதுதான் தன்னைக்குறித்த கேள்விகள் தனக்குள் எழும்பும் நிலைகள் தனக்கு ஏற்பட்டதாகக் கூறுகின்றார்.

முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அபிவிருத்தி மற்றும் புனர்வாழ்வு ஒன்றியம் (MWDRF) என்ற மீள்குடியேற்றத்தின் பின்னரான அவரது முதலாவது சமூகசேவை அமைப்பின் மூலமாக ஆரம்பித்த அவரது சமூக சேவை வாழ்க்கை, அளவுகணக்கில்லாத சவால்களை எதிர்கொண்டது. அவர் நினைத்தது போல சில தருணங்கள் அமையாமல் ஏமாற்றங்களை அளித்த போதும், அவர் அதனைத் தாண்டிச் சென்றமையே வெற்றிக்கு வழிவகுப்பதாக அமைந்தது. கோபம் தரும் தருணங்களை மிகவும் கஷ்டப்பட்டு தாண்டி வந்த நிலைமைகள் அவரை மேலும் வலுப்படுத்தின, திடப்படுத்தின.  பெண்கள் குறித்து ஆழமாக சிந்திக்க தூண்டப்படுவதும் அக் கட்டமைப்பு குறித்து சிந்திக்கக்கூடியதுமான நிலை அவருக்கு  ஏற்பட்டது. அவரது பயணங்களில் பல மூத்த பெண்ணியவாதிகளுடன் தான் மேற்கொண்ட பல கலந்துரையாடல்களின் மூலமாக ஆரம்பமான ஜென்சிலாவின் தீவிர சிந்தனை அவரை இவ்வாறு சிந்திக்க வழிவகுத்தது, 

"ஆணாதிக்க கட்டமைப்புகளுக்குள்ள எங்கட பெண்களிண்ட வாழ்க்கை முறைகள் எந்தளவில இருக்குது? அந்த ஏற்றத்தாழ்வுகளில் இருந்தும் வன்முறைக் கட்டமைப்புகளில் இருந்தும் எப்பிடி விடுபடலாம்? இதுகள் நாங்கள் ஒன்றிரண்டுபேர் சேர்ந்து கேள்வி கேட்டு முடியாத விடயம். எப்பிடி அணி திரள்தல், சேர்ந்து பயணம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபடலாம்? என சிந்திக்க வைத்தன.”

சமூகசேவைகளில் ஈடுபட்டுவரும் ஜென்சிலாவிடம் ‘உங்களுக்கு கோபம் வருவதில்லையா’ என்று பலர் கேள்விகளை முன்வைத்துள்ளனர். கோபம் வராமல் இருப்பதில்லை என்று கூறும் அவர், அது வருவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் உள்ளன என்றும் இயன்றளவு கோபத்தை வெளிக்காட்டாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வதாகவும் கூறுகின்றார். சில இடங்களில் தீர்மானம் எடுக்கும் நிலைகளில் முழுமையாக தாம் இல்லை என்பதை உணரும்போது அவரது உள்ளம் கவலை கொண்டிருக்கின்றது. “இவ்வளவு எல்லாம் நாங்கள் செய்கிறோம் ஆனாலும் தீர்மானம் எடுக்கும் இடத்தில் ஆண்களில் தங்கி இருக்க வேண்டியிருக்கிறது.” என்பது போன்ற எண்ணங்கள் மட்டும் தான் ஜென்சிலாவின் மனதில் கஷ்டத்தையும் கோபத்தையும் தருகின்றன. மற்ற எவற்றையும் அவர் பெரிது படுத்துவதில்லை. அவர் சில வேலைகளைச் செய்ய வேண்டி இருக்கும் போது, மறுப்பானதும் எதிர்ப்பான நிலைப்பாடாக வரும் தருணங்கள் அவருக்கு சிறிது மனக் கஷ்டத்தையும் கோபத்தையும் தரக்கூடியதாக இருந்துள்ளமையை நாம் அறியக்கூடியதாக உள்ளது.

"சங்கமி" என்பது அவரது பெண்கள் சார்பான சமூக சேவை அமைப்பாகும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் ஆரம்பித்து முல்லைத்தீவில் தற்போது அதனை செயற்படுத்துகின்றார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட, தமது சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட பெண்களுக்கு உதவும் முகமாகவும் இன நல்லுறவை மீண்டும் கட்டி எழுப்பவுமே இவர் இதனை ஆரம்பித்ததாகக் கூறுகின்றார். பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற நிலைகளை உருவாக்க அவர் மிகக்கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. பல நூறு ஆண்டுகளாக சமூகத்தில் தலைமுறை தலைமுறையாக கடத்தப்பட்டு வந்த நியதிகள் அவருக்கு முன்னால் மாபெரும் கோட்டை போல உயர்ந்து நின்றன. எனினும், அவர் தனது திடமன உறுதியால் எதிர்ப்புகளைத் தாண்டி முன்னேறினார். எதிர்ப்புகளைப் பொருட்படுத்திக் கொண்டிருக்கும் மனநிலையையும் ஒருகட்டத்தில் அவர் கடந்து போனதை அவரது வார்த்தைகளால் புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறான தருணங்களை கடந்து வருவதற்கு தந்தையைப் போலவே அவரது கணவரும் மூன்று பிள்ளைகளும் அவரது சமூக வேலைகளில் உறுதுணையாக இருப்பது அவருக்கு கிடைத்த வரம்.

சமூகத்தளத்திலிருந்து ஜென்சிலா எதிர்கொண்ட எதிர்ப்பு அழுத்தங்கள் அளவற்றவையாகும். பெண்கள் சமத்துவம் பேசுவது அல்லது பெண்ணிலைவாதம் என்ற சொல்லைப் பேசுவதையே சமூகத்தின் கணிசமானோர் எதிர்நிலை என்று நோக்கினர். சில இடங்களில் அந்த சொற்களைப் பேசுவது கூட, நேரடியாக எதிர்க்கப்பட்டது. பால்நிலை சமத்துவம், ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்லும் விஷயங்கள் தொடர்பில் மிகவும் கடுமையான எதிர்ப்புகள் வெளிவந்தன. அந்த மாதிரியான விஷயங்களை நியாயப்படுத்தப் போகும் போதும், பெண்ணிலைவாதக் கொள்கைகளை ஜென்சிலா பின்பற்றி நடக்கும்போதும், பல கேள்விகளை அவர் எதிர்கொண்டார். தனியே பெண்ணிலைவாதி அல்லது பெண் உரிமைகளுக்காக போராடுபவர் என்று இல்லாமல் தன்னை ஒரு மனித உரிமைச் செயற்பாட்டாளர் மற்றும் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பவர்  என்று கூறுவதையே அவர் விரும்புகின்றார்.   

அரச மட்டத்திலான எதிர்ப்புகளையும் ஜென்சிலா சந்தித்தார். பின்தொடர்தல்,  செய்யும் வேலையை கண்காணிக்க இரகசிய காவல்துறைப் பிரிவினர் பின்தொடர்வது, விசாரிப்பது போன்றவையும் நிகழ்ந்தன. ஜென்சிலாவின் சாதனைகளுக்கு உறுதுணையாக பல நண்பர்கள் இருந்த போதும் ஷிரீன் சரூர், ஜுவைரியா, மகா லக்ஷ்மி, கமலா வாசுகி போன்றவர்களின் நட்புறவு அவரை மேலும் வலுவேற்றியிருக்கின்றது. அவரது துயர் மிகுந்த பொழுதுகளில் நண்பர்களும் கணவரும் அளித்த பலத்தை அவர் நினைவு கூர்கின்றார்.

ஷிரீன் சரூரைச் சொல்லுவன். மற்றது என் குடும்பம். எனது கணவர். என்னைப் பற்றி தவறாக எழுதுதல், தவறான விமர்சனங்களைக் கொண்டுவாறதாக இருக்கலாம். அந்த இடத்தில அதைப் பொருட்படுத்தாம நம்பிக்கையோட முன்னோக்கிப் போறதெண்டால் அதற்கு கணவரின் துணையே காரணம். பிரச்சினைகளால நான் உடைந்து போகும் சந்தர்ப்பங்களில் நான் மீண்டு எழுவதற்கான சந்தர்ப்பங்களில ஷிரின் சரூர் இருந்தவ. அவ எனக்கு வழிகாட்டி இருக்கிறா. எப்பவும் எங்கட பாதை ஒரே முறையில ஏறாது. அடிக்கடி இந்த மாதிரி மன உளைச்சல்கள் சமூக சவால்கள் எல்லாம் வரும்போது, அது கீழே போகும்.சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அப்பிடி வாற நேரத்தில நான் நல்லா கீழ உடைஞ்சு போகும் போது, திரும்ப என்னை வெளியே கொண்டு வாறதில ஷிரீன் சரூருக்கு முக்கிய பங்கு இருக்கு. இந்த இரண்டு பேரையும் நான் குறிப்பிடுவன். இவர்களுடன் கமலா வாசுகியையும் குறிப்பிடுவேன். எங்களுக்கும் பாரத்தை இறக்கி வைப்பதற்கான இடம் ஒன்று கட்டாயம் இருக்க வேணும். இருந்தல் தான் நாங்களும் ஃப்ரீ ஆகி எங்கட வேலையை முன் கொண்டு செல்லலாம். அந்த  இடத்தில ஷிரின் சரூரையும் கமலா வாசுகியையும் தான் சொல்லுவன்.”

தனது சமூக சேவையால் பயன்பெற்றவர்களும் தனது பயணத்தில் துணையாக மாறியமையைக் குறிப்பிடும் ஜென்சிலா நிறைய நல்லுள்ளங்கள் தன்னுடன் இருப்பதாக கூறுகின்றார்.  2011-ஆம் ஆண்டில் முஸ்லிம் நண்பர்கள், தமிழ் நண்பர்கள் எல்லாரும் ஒன்று சேர்ந்து சங்கமி அமைப்பை உருவாக்கியதாக குறிப்பிடும் ஜென்சிலா, அது வளர்ந்து வரும் போது ஒரு வித்தியாசமான குழப்பம் ஏற்பட்டதாக வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறார். அப்போது ’ஏன் இவற்றைச் செய்வானேன்’ என்ற மனநிலை அவருக்கு வந்தது. எனினும் மற்றவர்கள் ஜென்சிலாவுடன்  மிகவும் இறுக்கமான நட்புப் பிணைப்பில் இருந்தனர். அந்த காலப்பகுதியில் ஜென்சிலாவின் குழுவினர் 1000, 2000 பயனாளிகளுடன் வேலை செய்திருந்தனர். குடும்ப வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களே நிறைய செயல்வாதிகளாக வெளியே வந்தவர்களாக இருந்தனர். 

நண்பர்களே தமக்கு பெரிதும் ஆதரவாகவும் துணையாகவும் இருந்து வந்ததாக ஜென்சிலா மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு ஏற்ற இறக்கத்திலும்  நண்பர் அணியுடன் இணைந்துதான் இந்த பயணம் சென்று கொண்டிருக்கிறது என்கிறார் அவர். “நிறைய நல்ல உள்ளங்கள் எங்களுடன் உள்ளன. அது எனக்கு பெரிய ஒரு கொடை.” எனவும் ஜென்சிலா மனம் நெகிழ்கின்றார்.

சமூகம் ஒன்றுபட்டு நின்று பணியாற்றுவதன் மூலம்  பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும் என ஜென்சிலா நம்புகின்றார். சமூக ஆதரவுப் பலத்தைத் திரட்டுவதன் மூலமே தமது சாதனைகள் நிகழ்த்தப்பட்டன என்பதில் அவர் உறுதியாக இருக்கின்றார். 2009-ஆம் ஆண்டில் இயங்கி வந்த ’வுமன் அக்‌ஷன் நெட்வேர்க்’ என்பது ஒரு பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு. அதிலும் ஜென்சிலா ஒரு முக்கியமாக நபராக இருந்தார்.  8 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன் ஒரே அமைப்பாக இணைந்து வேலைகளை ஆரம்பிக்கும் போதே, கூட்டாக செயற்படுவதன் உன்னதம் தமக்குப் புரிந்ததாக ஜென்சிலா தெரிவிக்கின்றார். ஆர்ப்பாட்டம் செய்யும்போதோ அல்லது வேறு வேலைகளின் போதோ தனியாளாக இல்லாமல் இணைந்து வேலை செய்வது ஒரு பெரிய பலம். அதிகாரத்தன்மையும் அங்கு குறைவாக இருக்கும். பெண்களின் கூட்டு அமைப்புகளை எடுத்து நோக்கினால், அதிகாரத் தன்மை அற்றதும் உறவுமுறைகளின் ஊடானதுமான தொகுதியை அங்கு காணக்கூடியதாக உள்ளது. அக்கா, சகோதரி, நண்பி என்ற உறவு முறையிலான நட்பு அங்கு உள்ளது. இது சொந்த வாழ்க்கைக்கும் பலமானதாக உள்ளது என்பதை அவருடைய வார்த்தைகளிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம். ஜென்சிலாவின் தொடர்ச்சியான சமுகப் போராட்டங்கள் குறிப்பிட்டளவு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அந்த மாற்றங்களை சாத்தியமாக்குவதன் பின்னணியை ஜென்சிலா இவ்வாறு விபரிக்கின்றார்.

“குறிப்பாக முஸ்லிம் பெண்கள் குறிப்பிட்ட குடும்ப சமூக எல்லைகளுக்குள்ளே மட்டும் வேலை செய்தல் என்பது தாண்டப்பட்டிருக்கின்றது. பரவலாக அமைப்புகளில் ஈடுபடுதல்  அதிகரித்துள்ளது. ஆரம்ப காலங்களில் பெண்களின் கல்வி இடைநிறுத்தத்துக்கு எதிராக நிறைய வேலை செய்தோம். குறிப்பிட்ட வயசோட பெண்களின் கல்வி இடைநிறுத்தக்கூடிய நிலை இருந்தது.   நிறையக்காலம் அது சார்ந்து சேவை செய்யக்கூடிய நிலை காணப்பட்டது. அதில் சில மாற்றங்கள் வந்தது. இளவயது திருமணங்கள் தொடர்பான பணியாற்றினோம். 33 வருடங்களாக நாம் பணியாற்றினோம். அந்த வகையான மாற்றங்களை நாங்கள் சமூகத்தில் பார்க்கக்கூடியதாக உள்ளது. ஆரம்ப காலங்களை விட இன்றைக்கு அதில் மாற்றங்கள் வந்திருக்கு. ஆரம்பத்தில பிரச்சினை தானா என அறியாத நிலையில தான் இருந்தார்கள். பெண்களுக்கு தொழில் முக்கியம் என்பது முக்கியமான விடயம். பொருளாதாரம் இல்லாவிட்டால் பெண்களின் தங்கி வாழும் நிலை அவங்களின் கௌரவத்தை பாதித்து உரிமையை தட்டிக்கேட்கும் நிலை அங்கேயே ஆரம்பித்துவிடும். பெண்கள் பொருளாதாரம் ஈட்டுதல் என்பதில் இன்று நிறைய மாற்றம் வந்திருக்கு. ஆரம்ப காலங்களில் ஆண்கள் தான் கூடுதலாக உழைத்தார்கள். பெண்கள் இல்லை. இன்று பெண்கள் இயறளவு உழைக்கக்கூடிய நிலைக்கு வந்திருக்கிறார்கள். மற்றது ஆரம்பத்தில் கட்டியமைக்கப்பட்ட தொழில்கள் இருக்கு. ஆசிரியர் தொழில் பெண்களுக்கு எளிதானது என்ற கருத்து இருக்கிறது. இன்றைக்கு அதில மாற்றம் வந்திருக்கு. அது மட்டும் தான் என்ற நிலையில் இருந்து இன்று பெண்கள் மாறி இருக்கின்றார்கள். பொதுவாக முழுநேர அரசாங்க வேலையை கூட பெண்கள் விரும்ப மாட்டார்கள். இன்று அந்த நிலையும் மாறியுள்ளது.”

பெண்களுக்கு ஏற்படும் பல்வேறான பிரச்சினைகளைப் பற்றிய தனது கருத்துக்களைக்கூறிய ஜென்சிலா, முஸ்லிம் விவாகரத்துச் சட்டம் பற்றிய தனது கருத்துக்களையும் விபரிக்கின்றார். முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டமானது 1951ம் ஆண்டு உருவாக்கப்பட்ட முஸ்லீம் தனியார் சட்டமாகும். இதில் பெண்களுக்கு பல்வேறு விதமான பாரபட்சங்கள் உள்ளது. இதனை மாற்றி அமைக்க 33 வருடங்களாக மூத்த பெண்ணியவாதிகள் போராடி வருகின்றனர். ஜென்ஸிலாவும் அவர்களுடன் 15 வருடங்களாக இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் மதத்தலைவர்கள் இதனை ஒரு சட்டமாக பார்க்காமல் மதம் சார்ந்த விடயம் என மக்களையும் அரசாங்கத்தையும் நம்ப வைத்து இச்சட்டத்தில் மாற்றம் கொண்டுவர போராடுபவர்களை மதத்திற்கு எதிராக செயற்படுபவர்கள் என பிரச்சாரம் செய்வதாகவும், மேலும் பெண்களையும் அணிதிரட்டி போராட்டங்களையும் மேற்கொள்கின்றதாகவும் கூறுகின்றார். இச்சட்டத்தினால் பாதிக்கப்படும் பெண்களது துன்பங்களையும் நீதிக்கான போராட்டங்களையும் அவர்களுடன் நேரடியாக வேலை செய்கின்ற ஜென்ஸிலாவால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. இச்சட்டம் தொடர்பாக மக்களிடையே பூரண தெளிவு வரவேண்டும் அத்துடன் தீர்மான பீடங்களும் இதன் தாக்கங்களை உணர வேண்டும் என்று கூறும் இவர் அதுவரை தாங்களும் போராடிக்கொண்டிருக்க வேண்டும் என்று உறுதியாக கூறுகின்றார்.

எந்த மாற்றத்தை சமூகத்தில் ஜென்சிலா எதிர்பார்த்தாரோ, அதே மாற்றத்தை தனது சொந்தக் குடும்பத்திலும் அவர் கண்டுள்ளமை மிக முக்கியமானது. இதுவே ஜென்சிலாவின் வெற்றிக்கான அத்திவாரம் என்றால் மிகையாகாது. குடும்பத்தில்  ஆண்-பெண் வகிபாகம் என்பதில் ஏராளமான கேள்வி கேட்க வேண்டி இருக்கின்றது எனவும், பாரம்பரியமாக வந்த பண்புகளை மாற்றுவதிலும் கேள்வி கேட்க வேண்டி இருக்கின்றது எனவும் ஜென்சிலா கருதுகின்றார்.  தனது சமூக வேலைகளுக்கிடையில்தான் தன் மகன் பிறந்தார் என்று குறிப்பிடும் ஜென்சிலா தன் கணவரில் காணாத மாற்றங்களை மகனில் காண்பதாக மகிழ்வுடன் தெரிவிக்கின்றார். ஜென்சிலாவினுடைய மகன் அவரின் மனைவியை வேலைக்கு அனுப்புவதில் எவ்வாறு கரிசனை காட்டுகிறார்? குடும்ப வேலைகளில் எவ்வாறு பங்கு கொள்கிறார்? என்பது போன்ற விடயங்களில் எல்லாம் மகனின் முன்னேற்றத்தை காண்பதாக ஜென்சிலா குறிப்பிடுகின்றார். அதேவேளை, தம் மகள்மார் தத்தம் தொழில்களைத் தேடுவதில், தங்களின் சுயகௌரவத்தை நிலைநிறுத்துவதில் உறுதியாக இருக்கின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார். எதிர்காலத்தில் இனநல்லுறவு முதலானவை எங்களது இயல்பான வாழ்க்கை மூலம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என ஜென்சிலா விரும்புகிறார். எதிர்காலத்தின் மீதும் அதன் புதிய தலைமுறை மீதும் பாரிய நம்பிக்கையைக் கொண்டிருக்கும் ஜென்சிலாவின் சமூகப் போராட்டங்களின் பின்னால் தாய்மை நிறைந்த கருணையைக் காண முடிகின்றது. நாளைய சந்ததியை நன்றாக வாழ வைக்க வேண்டும் என்ற தொனி, அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுகின்றது.

“நான் சொன்ன பாதைகளில சென்றால் இந்த உலகம் முரண்பாடானதாக இருக்காது. சாந்தமான ஒரு இடமாக இருக்கும். இந்த நாட்டின் வளங்கள் சரியாக பயன்படுத்தப்படும். அழகான நாடாக இது மாறும்.  அரசியல் என்பது தீர்மானம் எடுக்கும் ஒரு அழகிய இடமாக இருக்கும். நஞ்சுக்காற்றை சுவாசிக்காதவர்களாக எங்களது பிள்ளைகள் இருக்க வேண்டும். தேவையில்லாத நோய்களுக்கு உள்ளாகாத பிள்ளைகளாக இருக்க வேண்டும். கருத்துச் சுதந்திரம் உள்ள பிள்ளைகளாக இருக்க வேண்டும். பொருளாதார மேன்மையுடன் நாங்கள் வளர்கிறோமோ இல்லையோ, இப்படியான முரண்பாடுகள், போர்கள் அற்ற சமூகத்தில எங்கள் பிள்ளைகள் வளர வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பயணிக்கிறோம்.”

அவருடைய நம்பிக்கை நிலைபேறான நிஜமாக வேண்டும் என்பதே சமூகநீதியில் அக்கறை கொண்ட ஒவ்வொருவருடைய அவாவாகவும் அமைந்திருக்கின்றது.

ஜென்சிலா அவரது சமூக சேவைக்கான பங்களிப்புக்காக 2010 - ஆம் ஆண்டில், அமெரிக்க வெளியுறவுத் துறையினால் சர்வதேசரீதியில் துணிச்சல்மிக்க பெண்மணி என்று பெயரிடப்பட்டார். அப்போதைய அமெரிக்க முதல் பெண்மணியான மிஷெல் ஒபாமா மற்றும் வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோரிடமிருந்து அவர் தனது விருதைப் பெற்றார். பாலினம் தொடர்பான UNDP 2010 ஆசிய-பசிபிக் மனித அபிவிருத்தி அறிக்கையின் வெளியீட்டு விழாவில் அவர் ஒரு பேச்சாளராகவும் பங்கேற்றார். அங்கு அவர் பெண்களின் அரசியல் பங்கேற்பு, சட்ட உரிமைகள் மற்றும் பெண்களுக்கான அணுகல் போன்ற பிரச்சினைகளை சரிசெய்வதற்காக பெண்களின் உரிமைகள் பற்றிய தனது அணுகுமுறையை இலங்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார். 

ஜென்சிலா கடந்த 10 வருடங்களாக முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் மத்தியஸ்த சபை உறுப்பினராகவும் சமாதான நீதவானாகவும் பணியாற்றுகின்றார். இதன் மூலம் பல்வேறுபட்ட பிணக்குகளை மத்தியஸ்தம் செய்து சமூகத்திற்கு சேவையாற்றி வருகின்றார். மேலும் பால்நிலை கருத்தியலுடன் அக்கலந்துரையாடல்களை அவர் மேற்கொள்வதனால், பால்நிலைக் கண்ணோட்டத்துடன் குடும்ப பிரச்சினைகளை அவரால் அணுக முடிகின்றது. கடந்த 10 வருடங்களாக இக்குழுவில் இருக்கும் ஒரே ஒரு முஸ்லிம் பெண்ணான ஜென்சிலா, இன நல்லுறவை வளர்ப்பதற்கு தனக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்று இதனை கருதுகின்றார்.

(அபிராமி விமலாதித்தன் ஒரு சமூகவியல் ஆய்வாளர். அவர் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலுள்ள மக்களுடன் பல்வேறுபட்ட சமூக பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்)

குறிப்புகள்

இக்கட்டுரையினை சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கான ஆதரவினை எதிர்பார்க்கிறோம். மொழிபெயர்ப்புகள் தொடர்பில் எங்களுக்கு ஆதரவளிக்க விரும்பினால் அல்லது ஏதேனும் கேள்விகள் இருபின் storysofslwomen@everystorysl.org ற்கு மின்னஞ்சல் செய்யவும்.

குறிப்பு இணைப்புகள் மற்றும் மேலதிக வாசிப்பு:

  1. Jansila Majeed, https://en.wikipedia.org/wiki/Jansila_Majeed 

  2. Jansila Majeed, 2010 International Women of Courage Award Winner. Sri Lanka, March 1, 2010, https://2009-2017.state.gov/s/gwi/iwoc/2010/bio/137497.htm 

  3. https://web.facebook.com/photo/?fbid=253908744366998&set=pcb.253909904366882 

  4. Sri Lankan awarded an international Woman of Courage by US, https://web.archive.org/web/20150611024036/http://alameenpost.com/articles.aspx?categoryname=Women&newsId=1874 

  5. Clinton presents award to Majeed, https://web.archive.org/web/20161128210007/http://www.dailymirror.lk/news/2275-clinton-presents-award-to-majeed.html 

2010 International Women of Courage Award Winner, https://web.archive.org/web/20121013115125/http://www.state.gov/s/gwi/programs/iwoc/2010/bio/137497.htm